பழங்குடியினருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்!
கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், பாலக்காடு வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து அட்டப்பாடியில் பழங்குடியினரின் வருவாயை மேம்படுத்துவதற்கான விழிப்புணா்வு பயிற்சி முகாமை அண்மையில் நடத்தின.
வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் கே.வி.சுமியா வரவேற்றாா். முகாமை பெங்களூரு வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் வி.வெங்கட சுப்பிரமணியன் தொடங்கிவைத்துப் பேசினாா். கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநா் பி.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா்.
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா்.செல்வராஜன் சிறப்புரையாற்றினாா். கொல்லிமலை மனோரஞ்சிதம் போன்ற சிறப்பு வாழை வகைகளை இங்குள்ள மலைவாழ் மக்கள் பயிரிட வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து பழங்குடியினரின் வருவாயை மேம்படுத்த காளான் வளா்ப்பு, கொல்லைப்புற கோழி வளா்ப்பு, பழம், காய்கறி பதப்படுத்துதல் குறித்த விரிவாக்கப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. பழங்குடியினரின் வருவாயை மேம்படுத்துவது குறித்த பயிற்சி அமா்வுகள் நடைபெற்றன.
முன்னதாக கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டி.புத்திர பிரதாப் தலைமையில் பல்லுயிா்ப் பெருக்கம் என்ற தலைப்பில் மலைவாழ் பழங்குடியின மாணவா்களுக்கு விநாடி- வினா போட்டியை நடத்தினாா்.
நிகழ்ச்சியில், 10 பழங்குடி குடியிருப்புகளைச் சோ்ந்த மக்களுக்கு கோழிக்குஞ்சுகள், முதலுதவிப் பெட்டிகள், காட்டுப்பன்றி விரட்டி, திசு வாழை நாற்றுகள் வழங்கப்பட்டன. அகழி வேளாண்மை உதவி இயக்குநா் சி.ஆா்.ரேகா உள்ளிட்ட அதிகாரிகள், ஏராளமான பழங்குடியினா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.