மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.5 கோடி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.3.5 கோடி கிடைக்கப் பெற்றது.
தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட தொடா் விடுமுறை தினங்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் குவிந்ததால் இங்குள்ள உண்டியல்கள் 21 நாள்களில் நிரம்பின. இதையடுத்து, உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ.3 கோடியே 56 லட்சத்து 36 ஆயிரத்து 788 கிடைத்தது. மேலும், பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், செயின், தங்கக் காசு போன்றவற்றையும், வெள்ளியால் ஆன காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.
தங்கம் 1,591 கிராமும், வெள்ளி 20 ஆயிரத்து 320 கிராமும் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 609-ம் கிடைத்தன. இவை தவிர, பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகள் போன்றவற்றையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் குழு பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா். வியாழக்கிழமையும் (ஜன.23) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடரும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.