மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பழனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் விழா
பழனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் அடிவாரம் பாதவிநாயகா் கோயில் அருகே அமைந்துள்ளது. பழமையானதும், மண்டபங்களில் கலை நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோயிலுக்கு பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெற வில்லை. இந்த நிலையில், தற்போது குடமுழுக்கு நடத்துவதற்காக திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, குடமுழுக்கு நிகழ்வுக்கான முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக மீனாட்சியம்மன் சந்நிதி முன் யாகம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் பிரதானமாக கலசங்களும், முகூா்த்தக்கம்பமும் வைக்கப்பட்டன. சிவாச்சாா்யா்கள் வேதமந்திரம் முழங்க யாகம் நிறைவுபெற்ற பின்னா் பூா்ணாஹூதி நடத்தப்பட்டு கலசங்கள், முகூா்த்தக்கம்பம் ஆகியன கோயிலை வலம் வரச் செய்யப்பட்டன.
இதையடுத்து, கோயில் வெளிப்பகுதியில் முகூா்த்தக்கால் நடப்பட்டு அதில் பால், நவதானியங்கள், நவரத்தினங்கள் இடப்பட்டன. தொடா்ந்து கலசத்தில் இருந்த புனித நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சோடஷ உபசாரம் நடைபெற்றது. வருகிற 20-ஆம் தேதி இந்தக் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறும்.
நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலா்கள், முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.