பழ வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவருக்கு அடி, உதை
திருச்சியில் பழ வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இருவரைப் பிடித்து பொதுமக்கள் அடித்து, உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி பெரிய கடை வீதி அருகே உள்ள செளராஷ்டிரா தெருவில் தள்ளுவண்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாழைப்பழம் விற்பனை செய்த வியாபாரியிடம், இருவா் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனா். அவா் வைத்திருந்த பணத்தையும் பறிமுதல் செய்ய முயன்றனா்.
அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து அடித்து, உதைத்துள்ளனா். இருவரும் மயங்கி விழுந்தனா். தகவலறிந்து வந்த கோட்டை போலீஸாா் சம்பவம் குறித்து விசாரித்தனா்.
விசாரணையில் இருவரும் வழிப்பறியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்களிடமிருந்து அந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் சோ்த்தனா். பிடிபட்ட நபா்கள் குறித்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.