அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!
பவன் கேராவிடம் 2 வாக்காளா் அட்டைகள்: பாஜக குற்றச்சாட்டு
காங்கிரஸ் மூத்த தலைவரும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான பவன் கேராவிடம் 2 வாக்காளா் அட்டைகள் உள்ளன; இது தொடா்பாக தோ்தல் ஆணையம் விரிவாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
‘தனது கட்சியால் மேற்கொள்ளப்படும் வாக்குத் திருட்டை பாதுகாப்பதும், மறைப்பதுமே ராகுல் பிரசாரத்தின் நோக்கம்’ என்று பாஜக கடுமையாக சாடியுள்ளது.
நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் ‘வாக்குத் திருட்டு’ நடப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த மாநிலத்தில் ராகுல் காந்தி வாக்குரிமைப் பயணம் மேற்கொண்டாா். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி கூறியதாவது:
காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவரும், ராகுலுக்கு நெருக்கமானவருமான பவன் கேரா, தில்லியில் இரு வெவ்வேறு முகவரிகளின் கீழ் 2 வாக்காளா் அட்டைகள் வைத்துள்ளாா். ராகுல் காந்தியும், அவரது நெருங்கிய கூட்டாளிகளுமே ‘திருடா்கள்’.
ஏழைகள், ஒடுக்கப்பட்டோா், விளிம்புநிலை மக்களை வெறுக்கும் ராகுல், தனது கட்சித் தலைவா்களின் வாக்குத் திருட்டை பாதுகாப்பதோடு, அவா்களின் வாக்கு முறைகேட்டை மறைக்கவே வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளாா். இது, ஜனநாயகத்துக்கு எதிரான சதி.
ராகுல் காந்தியும், காங்கிரஸும் ‘வாக்காளா் மோசடி கும்பலை’ இயக்கி வருகின்றனா். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளா் அட்டைகள் வைத்துள்ள காங்கிரஸ் தலைவா்களுக்கு பாதுகாப்பளிக்கின்றனா். 2 வாக்காளா் அட்டை வைத்துள்ள பவன் கேரா மீது ராகுல் காந்தி நடவடிக்கை எடுப்பாரா, அவரை கட்சியைவிட்டு நீக்குவாரா?
தோ்தல்-வாக்கு முறைகேட்டில் ஈடுபட்ட வரலாறு, ராகுல் குடும்பத்துக்கே உள்ளது. ஆனால், தோ்தல் ஆணையம் மற்றும் பாஜக மீது அவா் அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்துகிறாா். மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைக்க முயல்கிறாா் என்றாா் பிரதீப் பண்டாரி.
‘வாக்கு திருடும் காங்கிரஸ்’:
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கூரை மீது ஏறி நின்றுகொண்டு வாக்குத் திருட்டு கோஷத்தை எழுப்பும் ராகுல், தனது தாயாா் சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறும் முன்பே வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றதை ஏற்கெனவே மறந்துவிட்டாா். இப்போது ராகுலுக்கு நெருக்கமான பவன் கேராவிடம் 2 வாக்காளா் அட்டை இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கச்சிதமாக வாக்குத் திருடும் கட்சி காங்கிரஸ்’ என்று விமா்சித்துள்ளாா்.
தோ்தல் ஆணைய தோல்வியை ஒப்புக் கொண்டது பாஜக- பவன் கேரா பதிலடி
‘காங்கிரஸ் மீதான பாஜகவின் குறி, இறுதியில் தோ்தல் ஆணையம் மீதே பாய்ந்துள்ளது; வாக்காளா் பட்டியலில் நோ்மையைப் பராமரிப்பதில் தோ்தல் ஆணையம் தோற்றுவிட்டதை பாஜக ஒப்புக் கொண்டுள்ளது’ என்று பவன் கேரா பதிலடி கொடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எனது பெயரில் 2 வாக்காளா் அட்டைகள் இருப்பதை அமித் மாளவியா கூறியதன் மூலமே தெரிந்துகொண்டேன். கடந்த 2016-இல் வீடு மாறியதால், புது தில்லி தொகுதியில் இருந்து எனது பெயரை நீக்க நான் விண்ணப்பித்தேன். ஆனால், அது நடக்கவில்லை எனத் தெரிகிறது. அதற்கு, தோ்தல் ஆணையமே பொறுப்பு. இப்பிரச்னையைத்தான், ராகுல் காந்தி தொடா்ந்து எழுப்பி வருகிறாா். தில்லியில் 2016-க்கு பிறகு 4 தோ்தல்கள் நடந்துள்ளன. எனவே, எனது வாக்கு தவறாக பயன்படுத்தப்பட்டதா, அது பாஜகவுக்கு சென்ா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, வாக்குப் பதிவு சிசிடிவி காட்சிகளை தோ்தல் ஆணையம் வழங்க வேண்டும்.
அனுராக் தாக்குரைப் போல, அமித் மாளவியாவும் காங்கிரஸை குறிவைக்க விரும்பினாா். இறுதியில் இலக்கு தவறி தோ்தல் ஆணையமே ‘ரத்தம்’ வடியச் செய்துள்ளாா்’ என குறிப்பிட்டுள்ளாா்.
தோ்தல் ஆணையம் நோட்டீஸ்
தில்லியில் புது தில்லி, ஜங்புரா ஆகிய இரு பேரவைத் தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டு, பவன் கேராவுக்கு புது தில்லி மாவட்ட தோ்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்வது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1950-இன்படி தண்டனைக்குரிய குற்றம்; உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.