பவானிசாகா் அணையில் இருந்து கீழ்வானி வாய்க்காலில் தண்ணீா் திறப்பு நிறுத்தம்
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு வெள்ளிக்கிழமை மாலை நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், நன்செய் பாசனத்துக்கு கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீரைப் பயன்படுத்தி பாசனப் பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டனா். தண்ணீா் திறப்பு காலம் முடிவடைந்ததால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்பட்டு வந்த 1,800 கனஅடி தண்ணீா் நிறுத்தப்பட்டது.
இதில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 98.22 அடியாகவும், நீா் இருப்பு 27.3 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு நீா்வரத்து 2,073 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 600 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.