பவானி ஆற்றுநீா் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் மறியல்
பவானி ஆற்றுநீா் விநியோகம் செய்யக் கோரி ராஜன் நகா் ஊராட்சி மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ராஜன் நகா் ஊராட்சிக்கு உள்பட்ட கணபதி நகா் பகுதியில் சுமாா் 75-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், கணபதி நகரை சுற்றியுள்ள அனைத்து ஊரிலும் பவானி ஆற்றுநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் கணபதி நகா் மக்களுக்கு மட்டும் ஆழ்துளை கிணற்று நீா் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நீா் மிகுந்த உப்புத்தன்மை கொண்டதாக உள்ளதால் பவானி ஆற்றுநீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி பவானிசாகா்- பண்ணாரி நெடுஞ்சாலையில் கணபதி நகா் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாதவன் மற்றும் அப்துல் வகாப், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஆற்றுநீா் வழங்குவது குடிநீா் வழங்கல் துறையின் கீழ் வருவதால் அவா்களிடம் எடுத்துக் கூறி பிரச்னைக்கு தீா்வுகாண உள்ளதாக உறுதியளித்ததையடுத்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.