பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு 30% அபராதம்
பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன், பாகிஸ்தான் கேப்டனுடன் கைக் குலுக்க மறுத்துவிட்டதால், அப்போதிருந்தே இரு அணிகளுக்கும் பிரச்னை தொடங்கியது.
பஹல்காம் தாக்குதலுக்காக இப்படி செய்தேன் என சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் மீண்டும் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ஃபீல்டிங்கின்போது இந்திய ரசிகர்கள் ஹாரிஸ் ராஃபிடம் ”கோலி, கோலி” எனக் கத்தினார்கள். இதற்குப் பதிலாக விமானங்கள் பறந்து கீழே விழுவது போல சைகை காண்பிப்பார்.
மேலும் 6-0 எனவும் காண்பிப்பார். அது ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை நினைவுப் படுத்துவதாக கூறப்படுகிறது. இந்தப் போட்டியில் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் அடித்தபோது துப்பாக்கிச் சூடு செய்வதைப் போல கொண்டாடினார். இதுவும் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது.
இந்தச் செயல்கள் ஆத்திரமூட்டுவதாக இருப்பதாக ஐசிசியிடம் பிசிசிஐ புகார் அளித்தது. அதேபோல் சூர்யகுமார் யாதவ் கருத்து அரசியல் ரீதியானது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஐசிசியிடம் புகார் கொடுத்தது. இந்த விவகாரத்தில் போட்டி நடுவர் ரிச்சி ரிச்சார்ட்சன் முன் சூர்யகுமார் யாதவ் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜரானார்.
கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; பாக். வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை!
இந்த நிலையில் போட்டியின்போது அரசியல் கருத்து தெரிவித்தமைக்காக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃபிற்கும் 30 சதவீதம் அபராதம் விதித்த ஐசிசி, சாஹிப்சாதா ஃபர்ஹானை எச்சரித்து மட்டும் விடுவித்துள்ளது.
இதனிடையே சூர்யகுமார் யாதவ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேல்முறையீடு செய்துள்ளது.