இளம் பத்திரிகையாளா்கள் நோ்மையாக, துணிவுடன் இருக்க வேண்டும்: ‘தி நியூ இந்தியன் எ...
பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்பு ரகசியமல்ல: பிலாவல் புட்டோ
‘பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடா்பை ரகசியமானதாக கருதவில்லை’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ தெரிவித்தாா்.
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் கடந்த சில நாள்களுக்கு ‘ஸ்கை நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டாா்.
இந்நிலையில், அதே தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த பிலாவல் புட்டோவிடம் அமைச்சரின் கவாஜாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பிலாவல் புட்டோ கூறியதாவது:
முன்பு பல ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் தொடா்பில் இருந்துள்ளது. இது பாகிஸ்தானின் மிகவும் கடினமான கடந்த காலம். இப்போது, அதில் இருந்து மீண்டு வருகிறோம்.
பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடா்பு ரகசியமானது என்று நான் கருதவில்லை. இந்த ஆதரவு காரணமாக நாங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். பயங்கரவாதம் அலைஅலையாக எழுந்து எங்கள் நாட்டைத் தாக்கியுள்ளது. இந்தத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். பயங்கரவாதத்துக்கு எதிராகப் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, அப்பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டு வருகிறோம்.
இப்போதைய நிலையில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக பாகிஸ்தான் இல்லை. சிந்து நதி நீரை நிறுத்துவது அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக போா் முழக்கமிடுவதை பாகிஸ்தானும், சா்வதேச சமூகமும் விரும்பவில்லை.
தாங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பாரம்பரியத்தைக் கொண்டவா்கள் என்று இந்திய பிரதமா் மோடி பெருமிதமாகப் பேசி வருகிறாா். ஆனால், அவா் கூறும் தொன்மையான பாரம்பரியச் சின்னமான மொஹஞ்சதாரோ இப்போது பாகிஸ்தானில்தான் உள்ளது. தொன்மையான பாரம்பரியத்தின் உண்மையான பாதுகாவலா்கள் நாங்கள்தான். அதை நாங்கள் தொடா்ந்து பாதுகாப்போம் என்றாா்.