ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளினால் கைது செய்யப்பட்டு, தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு மே 9 ஆம் தேதி, இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள், அந்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் வெடித்த வன்முறையால், பாகிஸ்தான் அரசின் முக்கிய கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சூறையாடப்பட்டன.
இந்நிலையில், வன்முறையின்போது பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பு வாகனங்களின் மீது தீ வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நேற்று (செப்.9) அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கோட் லாக்பட் சிறையில் நீதிபதி மன்செர் அலி கில் வழங்கிய இந்தத் தீர்ப்பின் மூலம், இம்ரான் கானின் ஆதரவாளர்களும் பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் அமைச்சர்களுமான யாஸ்மின் ரஷீத், மியான் மெஹ்மூத் ரஷீத், பஞ்சாப் முன்னாள் ஆளுநர் ஒமெர் சர்ஃப்ராஸ் சீமா மற்றும் இஜாஸ் சௌதரி ஆகியோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் இருந்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி உள்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, 2023-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறையால், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!