பாகிஸ்தானில் பதுங்கு குழிகள் வெடி வைத்து தகர்ப்பு!
பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் மோதல்காரர்களின் 30க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.
வடமேற்கு பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் தொடர் மோதல்களிலும் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வந்த ஷியா மற்றும் சுன்னி பிரிவைச் சேர்ந்த அலிசாய் மற்றும் பாகன் பழங்குடியினர் இடையிலான அமைதி ஒப்பந்தம் கடந்த ஜன.4 அன்று கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருதரப்பு மக்களும் அந்நாட்டு அரசிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து 15 நாள்களுக்குள் சரணடைய சம்மதித்துள்ளனர்.
இதையும் படிக்க: அமெரிக்க பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பு!
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள பதுங்கு குழிகள் பிப்ரவரி மாதத்தின் இறுதிக்குள் அழிக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜன.10 அன்று பதுங்கு குழிகளை வெடி வைத்து தகர்க்கும் பணி மாவட்ட நிர்வாகத்தினரால் துவங்கப்பட்டது. மேல் மற்றும் கிழ் குர்ராம் மாவட்டத்தில் மொத்தம் 250க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் இருப்பதாகவும் அதில் தற்போது வரை 30க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் தகர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் இருக்குழுக்களுக்கும் மத்தியில் துவங்கிய மோதல்களில் 133 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.