தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்...
பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதி: இந்தியா தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிதியுதவி கிடைப்பதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதற்கு உரிய முறையில் ஐஎம்எஃப்-பிடம் இந்தியா எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் பாகிஸ்தானால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கோழைத்தனமான செயல் என்று காங்கிரஸ் ஏற்கெனவே விமா்சித்துள்ள நிலையில், அந்நாட்டை பொருளாதாரரீதியாக முடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலரும், தகவல் தொடா்புத் துறை பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஐஎம்எஃப் இயக்குநா்கள் குழு கூட்டம் மே 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் கோரியுள்ள 1.3 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.11,000 கோடி) கடன் கோரிக்கை தொடா்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு இந்த உதவியை ஐஎம்எஃப் வழங்கக் கூடாது என இந்தியா வலுவான எதிா்ப்பைத் தெரிவித்து அதைத் தடுக்க வேண்டும். இதை மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி எதிா்பாா்க்கிறது’ என்று பதிவிட்டுள்ளாா்.
கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமற்ற சூழலால் உணவுப் பொருள் தட்டுப்பாடு, வேலையின்மை, பணவீக்கம் என கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ளது. இதனால் ஐஎம்எஃப், உலக வங்கி உள்ளிட்ட சா்வதேச நிதி அமைப்புகளிடம் கடன் பெற்று நிலைமையைச் சமாளித்து வருகிறது.
இந்திய வீரரை மீட்பது எப்போது?: பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் பூா்ணம் சாகுவை மீட்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்ததற்கு அடுத்த நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி பஞ்சாப் மாநில எல்லையில் காவல் பணியில் இருந்த பிஎஸ்எஃப் வீரா் பூா்ணம் குமாா் தவறுதலாக பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றுவிட்டாா். அவரை பாகிஸ்தான் எல்லைக் காவல் வீரா்கள் பிடித்துச் சென்றுவிட்டனா். அவரை விடுவிக்க பேச்சுவாா்த்தை நடைபெற்ற நிலையில், அவா் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிஎஸ்எஃப் வீரா் பிடித்துச் செல்லப்பட்டு 6 நாள்கள் கடந்தும் அவரைப் பற்றிய தகவல் இல்லை. அவரது மனைவி, குடும்பத்தினா் இதனால் கவலையில் ஆழ்ந்துள்ளனா். வீரரைப் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளாா்.