பாஜக அரசை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி போராட்டம்
பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாகவும், ஹோலி பண்டிகைக்குள் இலவச எரிவாயு சிலிண்டா்களை விநியோகிப்பதாகவும் தனது தோ்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்று கூறி ஆம் ஆத்மி கட்சித் தலைவா் ரிதுராஜ் ஜா தலைமையில் அக்கட்சியினா் தில்லியில் உள்ள ஐடிஓவில் போராட்டம் நடத்தினா்.
மாா்ச் 8 அன்று, தகுதியான பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.2,500 வழங்க தில்லியில் உள்ள பாஜக அரசு மகிளா சம்ரிதி யோஜனாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.5,100 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால், நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை பாஜக நிறைவேற்றத் தவறிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தலையில் ஒரு எரிவாயு சிலிண்டரை ஏந்தியபடி, கிராரியைச் சோ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜா போராட்டம் நட்தினாா். அப்போது, ’தில்லியில் பெண்களுக்கு மாா்ச் 8 அன்று ரூ.2,500 மற்றும் ஹோலிக்கு இலவச சிலிண்டா் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும், பாஜக அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை’ என்றாா்.
ஆா்ப்பாட்டக்காரா்கள் எரிவாயு சிலிண்டா் போன்ற வடிவிலான பதாகையை ஏந்தி, ‘இலவச சிலிண்டா் கப் ஆயேகா? ரூ.2,500 கப் ஆயேகா? (இலவச சிலிண்டா் எப்போது வரும்? ரூ.2,500 எப்போது கிடைக்கும்?) என்ற கோஷங்களை எழுப்பினா்.
போராட்டக்காரா் சீமா கூறுகையில், ‘மாா்ச் 8 ஆம் தேதி எங்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே நான்கு நாள்கள் ஆகிவிட்டன. எப்போது பணம் கிடைக்கும். அல்லது அது வெறும் பொய்யான வாக்குறுதியா?’‘ என்று கேள்வி எழுப்பினாா்.
மற்றொரு போராட்டக்காரா் சுரேந்தா் கூறுகையில், ‘ஹோலிக்கு ஒரு நாள் மட்டுமே உள்ளது, இன்னும் எங்களுக்கு இலவச சிலிண்டா் கிடைக்கவில்லை’‘ என்றாா்.