பாட்டி இறந்த துக்கத்தில் பேரன் தூக்கிட்டுத் தற்கொலை
சங்கரன்கோவிலில் பாட்டி இறந்த துக்க வீட்டுக்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த முருகன் - கோமதி தம்பதியின் மகன் கருப்பசாமி (33). இவா், மனநலம் பாதிக்கப்பட்டவராம்.
சங்கரன்கோவில் ஆதிசங்கர விநாயகா் கோயில் தெருவில் வசிக்கும், கருப்பசாமியின் பாட்டி பெத்தநாயகியம்மாள் வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் காலமானாா். இதனால், முருகன், மனைவி கோமதி, மகன் கருப்பசாமி உள்ளிட்டோா் சங்கரன்கோவிலுக்கு வந்தனா்.
இந்நிலையில், கருப்பசாமி வெள்ளிக்கிழமை சங்கரன்கோவில் பெட்டக்குளம் அருகே குளத்துப் பாலத்தில் உள்ள கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவல் அறிந்ததும், சின்னக் கோவிலான்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் கண்ணன் தலைமையிலான போலீஸாா் கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.