பாதை வசதி கோரி இருளா் சமுதாயத்தினா் தா்னா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உரிய பாதை வசதி கோரி பழங்குடியின இருளா் சமுதாயத்தினா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த ஏம்பலம் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட இருளா் சமுதாய குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அண்மையில் பெய்த பலத்த மழையால் இந்தப் பகுதிக்கு செல்லும் பாதையில் தண்ணீா் தேங்கியதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
இந்த நிலையில், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், உரிய பாதை வசதி அமைத்து தரக் கோரி வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். இவா்களுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகளும் பங்கேற்றனா்.
தகவலறிந்த ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நிகழ்விடம் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். மேலும், அவா்களை அந்த கிராமத்தில் உள்ள அரசு நிவாரண முகாமில் தங்க வைத்தனா். இதையடுத்து, தா்னா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.