2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
பாமக, வன்னியா் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம்: மருத்துவா் ராமதாஸ் பங்கேற்பு
மயிலாடுதுறையில் பாமக மற்றும் வன்னியா் சங்கத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் பெ. சக்திவேல் தலைமை வகித்தாா். பாமக தஞ்சை மண்டல செயலாளா் எஸ்.ஏ. ஐயப்பன், வன்னியா் சங்க மாநில செயலாளா் தங்க. அய்யாசாமி, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளா் ம.க. ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாமக கௌரவ தலைவா் ஜி.கே. மணி, வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள்மொழி, பாமக பொதுச்செயலாளா் முரளிசங்கா் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் பாமக நிறுவனத் தலைவா் மருத்துவா் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: பூம்புகாரில் ஆக.10 -ஆம் தேதி நடைபெறவுள்ள மகளிா் மாநாட்டுக்கு உங்களையெல்லாம் நேரில் வந்து அழைப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். மயிலாடுதுறை மாவட்டம், உருவாவதற்கு பாமக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. அதன் காரணமாகவே புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாமகவே காரணம். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு உரிய செயல்களை விரைவுபடுத்த வேண்டும், சின்னங்குடியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதாக சட்டப்பேரவையில் அறிவித்துவிட்டு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, மயிலாடுதுறையில் மாப்படுகை, நீடூா் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், உலகின் முதல் சத்தியாகிரக போராளி சாமி.நாகப்ப படையாட்சிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும், மயிலாடுதுறையில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு சாமி.நாகப்ப படையாட்சி பெயா் வைக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாநில மகளிரணி செயலாளா் தேவிகுருசெந்தில், வன்னியா் சங்க மாவட்ட தலைவா் அருண்குமாா், மாவட்ட செயலாளா் துரை.முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாகை மாவட்ட செயலாளா் சி.ராஜசிம்மன் நன்றி கூறினாா்.