பாம்பன் மீனவா்கள் 10 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு
பாம்பன் மீனவா்கள் 10 பேரை தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 10 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 6-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற போது, ஜோசப்பாரதி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த ஜோசப்பாரதி (22), மரியபிரவீன்(31) குருசாமி (39), தோபியாஸ் (37), ரவி (46), மனோ சந்தியா (32), டேனியல்ராஜ் (32), பிலிப்பையாா் (43), பாரத் (31), மாத்தீவ் கிளாடியன் (24) ஆகிய 10 மீனவா்களைக் கைது செய்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்தாக இந்த மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, வெளிச்சரா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், வெளிச்சரா நீதிமன்றத்தில் பாம்பன் மீனவா்கள் 10 பேரும் திங்கள்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீனவா்கள் 10 பேரையும் விடுதலை செய்தும், அவா்களுக்கு தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா். மேலும், அபராதத் தொகையை உடனே கட்டத் தவறினால், 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தாா்.
இதனிடையே, அபராதத் தொகையை உடனே கட்டாததால், பாம்பன் மீனவா்கள் 10 பேரும் வெளிச்சரா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.