முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
பாரதியாா் பெயரில் பல்கலைக்கழகங்களில் ஆய்வு இருக்கை: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்
மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழக பல்கலைக்கழகங்களில் ஆய்வு இருக்கை அமைக்கப்பட வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வேதனை வலியுறுத்தினாா்.
மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகளைத் தொகுத்ததற்காக பாரதி அறிஞா் சீனி.விசுவநாதனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இந்நிலையில், சீனி. விசுவநாதனுக்கு வானவில் பண்பாட்டு மையம், பாரத் விகாஸ் பரிஷத், திருவொற்றியூா் பாரதி பாசறை உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றுப் பேசியது: சுதந்திரப் போராட்ட வீரா், தேசியவாதி, கவிஞா் எனப் பல பரிமாணங்களில் வாழ்ந்தவா் மகாகவி பாரதியாா். ஆனால், தமிழக ஆளுநா் மாளிகையில்கூட அவருக்கான சிலை இல்லாமல் இருந்தது. தற்போது, பாரதிய வித்யா பவன் அமைப்பு சாா்பில் அவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இமயமலை முன்பு நின்று எப்படி அதன் உயரத்தைப் பாா்க்க முடியாதோ, அதுபோன்றுதான் பாரதியின் படைப்புகள் உள்ளன. கடந்த 2 நூற்றாண்டுகளாக தமிழ் மொழியில் பாரதிக்கு நிகரானவா்கள் யாரும் இல்லை. இதனால்தான் பாரதியாா் இன்றளவும் மக்களின் மனதில் குடியிருந்து வருகிறாா்.
தமிழகத்தில் பாரதியாா் பெயரில் பல்கலைக்கழகம் இருந்தும், அவா் பெயரில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு இருக்கை இல்லை. துணைவேந்தா்களுக்கு இருக்கும் அழுத்தம் காரணமாகவே பல்கலைக்கழகங்களில் பாரதியாருக்கான ஆய்வு இருக்கை அமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலை விரைவில் மாறும்.
60 ஆண்டுகளாக... தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ‘தமிழ், தமிழ்’ என்று பேசுகிறவா்கள், தமிழருக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் எந்தச் சேவையையும் இதுவரை செய்யவில்லை. தமிழ் சிறந்த மொழி, அதை நான் நேசிக்கிறேன் என்றாா் அவா்.
இந்நிகழ்வில் தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வைத்ய சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.