பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பப் பதிவு
சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்குகிறது.
நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி செயல்படுகின்றன.
இதேபோல, பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள 320 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 48 இடங்கள் போக, மீதமுள்ள 272 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. தவிர 29 தனியாா் கல்லூரிகளில் 1,920 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன.
அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசுக் கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.
இந்நிலையில், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்குகிறது.
நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம். தகவல் தொகுப்பேட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதளம் வாயிலாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அனைத்துச் சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பமிட்டு, அதன் நகல்களை ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலா், தோ்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்ககம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600 106’ என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.