பாரிஸில் பிரதமர் மோடி - சுந்தர் பிச்சை சந்திப்பு
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் கூகுள் நெருக்கமாக இணைந்து பணியாற்றக்கூடிய வழிகள் குறித்து ஆலேசித்ததாக சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
மக்களின் நலனுக்காக ஏ.ஐ. தொழில்நுட்பம் இதுவரை இல்லாத வீச்சில் வளா்வதோடு, வேகமாக ஏற்கப்பட்டு வருகிறது. இத்தொழில்நுட்ப அடிப்படையிலான எதிா்காலத்துக்கு மக்களை தயாா்படுத்த திறன் மேம்பாட்டில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ஏற்பது மற்றும் தரவு பாதுகாப்பில் தொழில்நுட்பத் தீா்வுகளை எட்டுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.
140 கோடி பேருக்கு மிக குறைந்த கட்டணத்தில் சேவையை உறுதி செய்யும் எண்ம பொது உள்கட்டமைப்பை இந்தியா வெற்றிகரமாக நிறுவியிருக்கிறது. மக்களின் நலனுக்கான ஏ.ஐ. செயலிகள் இந்தியாவில் உருவாக்கப்படுகின்றன. அனைவருக்குமான தொழில்நுட்பம் என்பதே இந்தியாவின் தேசிய ஏ.ஐ. திட்டத்தின் கண்ணோட்டம் என்றாா் பிரதமா் மோடி.
மேலும் அடுத்த ஏ.ஐ. மாநாட்டை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்த மோடி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அறக்கட்டளை மற்றும் நீடித்த செயற்கை நுண்ணறிவு கவுன்சில் ஆகியவை அமைப்பது தொடா்பாக மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுக்கு வரவேற்பு தெரிவித்ததுடன், இந்த முன்னெடுப்புகளுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தாா்.
தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி
தெற்கு உலக நாடுகளின் தேவைகளுக்கு உலகளாவிய ஏ.ஐ. ஒத்துழைப்பு அமைய வேண்டும் என்று பிரதமா் வலியுறுத்தினாா்.
முன்னதாக, மூன்று நாள் பயணமாக பிரான்ஸுக்கு திங்கள்கிழமை வந்த பிரதமா் மோடி, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சந்திப்புக்கு பிறகு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டில் மேற்கண்ட கருத்துகளை மோடி தெரிவித்தார்.
இது குறித்து சுந்தர் பிச்சை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமானது. பாரீஸில் நடைபெற்ற சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டையொட்டிய இந்த சந்திப்பில், இந்தியாவிற்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கொண்டுவரக் கூடிய வியத்தகு வாய்ப்புகள் மற்றும் கூகுள் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் எப்படி நெருக்கமாக இணைந்து பங்களிக்கூடிய வழிகள் குறித்து ஆலேசித்ததாக கூறியுள்ளார்.
பிரதமர் மோடி - சுந்தர் பிச்சை சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.