பிக் பாஸ் பிரபலங்களுக்கு விரைவில் திருமணம்!
பிக் பாஸ் பிரபலங்களான அர்ச்சனா - அருண் பிரசாத் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
நிச்சயதார்த்த நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அர்ச்சனா தனது ரசிகர்களுக்காக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ள ஜோடிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன். ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்தாலும், பின்னர் மக்களின் ஆதரவுடன் பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளராக வாகை சூடினார்.
அடுத்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகர் அருண் பிரசாத் போட்டியாளராகப் பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பே அர்ச்சனாவும் அருண் பிரசாத்தும் காதலித்து வந்துள்ளனர்.
இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து புகழ் பெற்ற நிலையில், இவர்களின் காதல் பிக் பாஸ் வீட்டில்தான் பலருக்கும் தெரியவந்தது.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, அருண் தனது காதலியான அர்ச்சனாவுக்கு பிறந்தநாளன்று நள்ளிரவு கேமராவைப் பார்த்து வாழ்த்து கூறினார். அப்போது தனது காதலையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. இந்த விடியோவைக் குறிப்பிட்டு அர்ச்சனாவும் காதலை ஏற்பதைப் போன்று பதிவிட்டிருந்தார்.
திரைப் பிரபலங்கள் இருவர் தங்கள் காதலை பொது வெளியில் வெளிப்படுத்திக்கொண்ட இந்த சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.
இந்த நிலையில், இருவரும் தங்கள் குடும்பத்தின் ஒப்புதலுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிச்சயதார்த்தத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் பலர் திருமண வாழ்வில் இணையவுள்ள ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க |ஆஹா கல்யாணம் நடிகைக்கு விரைவில் கல்யாணம்! காதலரைக் கரம்பிடிக்கிறார்!