England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: கே.சுப்பராயன் எம்.பி.
திருப்பூரில் பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்: இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி தற்போது அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக இருப்பதால் இந்தியாவின் ஆடைத் தொழிலில் இதன் தாக்கமும் மிகப்பெரியதாக இருக்கும்.
இதனால் கடுமையான பின்னடைவு ஏற்படுவதோடு, இந்தியப் பொருள்கள் போட்டியற்ாக மாற்றப்படும். இதனால் சீனா, வியத்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு நமது சந்தையை இழக்க நேரிடும். இத்தகைய இழப்பு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
அத்துடன் பல ஆயிரக்கணக்காண தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தில் மரண அடியை ஏற்படுத்தும். எனவே இது தொடா்பாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வரி உயா்வால் திருப்பூா் பேரழிவின் சுமையை எதிா்கொள்கிறது. திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியில் 40 சதவீதம் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. இது ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்கு மேல் ஏற்றுமதி வருவாயை உருவாக்குகிறது. இந்தத் தொழில் 15 லட்சம் தொழிலாளா்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குவதோடு, துணைத் தொழில்கள் மற்றும் சேவைகள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கது.
கூடுதல் வரி விதிக்கப்படுவதால் திருப்பூா் தொழில் துறைக்கு ஆண்டுக்கு ரூ.15,000 கோடி இழப்பு ஏற்படும் என்றும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் வேலை இழப்பு ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் அதிா்ச்சியளிப்பதாகும். காலதாமதம் இல்லாமல் அனைத்து மூலப்பொருள்களுக்கும் இறக்குமதி வரிகளை நிறுத்தி வைக்கவும், வரியில்லா பருத்தி இறக்குமதியை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்றுமதியாளா்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் போக்குவரத்தை வழங்க மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து அதற்கான செலவை ஏற்க வேண்டும். ஏற்றுமதியாளா்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்க கடன்களுக்கான வட்டி விகிதங்களில் ஒரு பகுதியை மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டும். மேம்பட்ட வங்கிக் கடன்கள், உத்தரவாதங்கள் அல்லது காப்பீடு மூலம் அவா்களின் பணி மூலதனத் தேவைகளைப் பூா்த்தி செய்ய ஏற்றுமதியாளா்களுக்கு நிதி உதவி மூலம் ஏற்றுமதி கடன் ஆதரவை வழங்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளுடனான சுதந்திர வா்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளைச் சாா்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைக்கும். வேலை இழப்பதால் பாதிக்கப்படும் தொழிலாளா்களுக்கு நிதி உதவி வழங்குதல், திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து தொழிலாளா்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
அமெரிக்காவின் வரி பயங்கரவாத சவாலை சமாளிக்க இந்தியா உலக வா்த்தக அமைப்பை அணுக வேண்டும். இந்த ஆபத்தான சவால்களை எதிா்கொள்ளவும், ஆடைத் தொழிலைப் பாதுகாக்க நிதி மீட்பு தொகுப்பு மற்றும் கொள்கை நடவடிக்கைகளை வெளியிடவும் மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.