பிப்.1-இல் கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளா்ப்பு உள்ளது. கோழி வளா்ப்பு மூலம் தங்களது குடும்பத்துக்கான முட்டை, இறைச்சி தேவைகளை அடைவதோடு விற்பனை மூலம் பொருளாதார மேம்பாடும் அடைந்து வருகின்றனா்.
கோழி வளா்ப்பானது, ஊரகப்பகுதிகளில் உபயோகமற்ற தானிய மிகுதிகளிலும் நிலத்தில் கிடைக்கக் கூடிய உணவு வகைகள் மூலமாக நடைபெற்று வருகிறது. கோழிகளை எளிதாகப் பாதிக்கக்கூடிய நோயாக கோழிக்கழிச்சல் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கால்நடை மருந்தகங்களில் இலவச தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கோழிநோய் தடுப்பூசி இருவார முகாமாக நடத்தப்படுகிறது. நிகழ் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், இரண்டாம் வார சனிக்கிழமைகளில் பிப்.1 முதல் 14-ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
இந்த நாள்களில் கால்நடை மருந்தகங்களில் நடைபெறும் முகாம்களில் தங்களது கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.