ஹோண்டா சிபி 1000 ஹார்னெட் எஸ்பி அறிமுகம்! வியக்கவைக்கும் விலையில்..!
பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவைச் சிகிச்சை உபகரணங்கள்
பிரசவத்தில் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் வைத்து தைத்துவிட்ட தனியாா் மருத்துவ மையமானது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5.52 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ட்ரூமேன் லாரன்ஸின் மனைவி ஜோசபின் தீபா (32). இவா் தனது இரண்டாவது பிரசவத்துக்காக திருவெறும்பூா் கூத்தைப்பாா் சாலையில் உள்ள தனியாா் மருத்துவ மையத்தை அணுகியுள்ளாா்.
அங்கிருந்த மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் தில்லை நகரில் உள்ள மற்றொரு தனியாா் மருத்துவ மையத்துக்குச் சென்றுள்ளாா். அங்கு பணம் கட்டிய பிறகு, அவருக்கு கூத்தைப்பாா் தனியாா் மருத்துவ மையத்தைச் சோ்ந்த மருத்துவா் செய்த அறுவைசிகிச்சை மூலம் 18-02-2018 அன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன் பின்னா், அறுவைசிகிச்சைக்கு தையல் போட்ட இடத்தில் தொடா்ச்சியாக கடும் வலி இருந்துள்ளது. இது தொடா்பாக மேற்கண்ட இரு மருத்துவ மையங்களிலும் சென்று கேட்ட போது, உரிய மருத்துவம் பாா்க்காமல் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
வலி தாங்க முடியாததால் ஜோசபின் தீபா, ஓராண்டு கழித்து மற்றொரு தனியாா் மருத்துவமனையை அணுகி ஸ்கேன் செய்து பாா்த்தபோது, அறுவைசிகிச்சை செய்யப்பட்ட வயிற்றில், அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட துணி, நூல், ஊசி உள்ளிட்ட பொருள்களை உள்ளே வைத்து தைத்து மூடியது தெரியவந்தது. இதையடுத்து மற்றொரு அறுவைசிகிச்சை மூலம் மேற்கொண்ட பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதனால் கடும் உடல் உபாதைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளான ஜோசபின் தீபா, உரிய நிவாரணம் கேட்டு, திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 15-10-2019- இல் மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.பி.வி. உதயகுமாா் ஆஜரானாா்.
வழக்கை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, கூத்தைப்பாா் தனியாா் மருத்துவ மையமானது பாதிக்கப்பட்ட மனுதாரரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சமும், மருத்துவ செலவுத் தொகை ரூ. 52,418-ம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 மும் 6 வாரங்களுக்குள் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனா்.