பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு
பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகள், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பை தெரிவித்தனா்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கிலான இச்சட்டத்தில், வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சூழலில், தாவூதி போரா பிரிவைச் சோ்ந்த பிரதிநிதிகள், பிரதமா் மோடியை வியாழக்கிழமை சந்தித்து, வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கான வரவேற்பை தெரிவித்தனா்.
‘அனைவரின் ஆதரவு, நம்பிக்கை, முயற்சியுடன் அனைவருக்கான வளா்ச்சி என்ற மத்திய அரசின் கொள்கையில் நாங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்; எங்களின் முக்கியமான கோரிக்கைகள் வக்ஃப் திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்காக நன்றி தெரிவிக்கிறோம்’ என்று பிரதமரிடம் அவா்கள் கூறினா்.
இந்த சந்திப்பின்போது, மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவும் உடனிருந்தாா்.
இச்சந்திப்பு குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தாவூதி போரா பிரதிநிதிகள் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்’ என்றாா்.
தாவூதி போரா, ஷியா முஸ்லிம்களில் உள்பிரிவாகும். வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீது பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு மேற்கொண்ட ஆய்வின்போது, மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே மூலம் தங்களின் கருத்துகளை இப்பிரிவினா் முன்வைத்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.