Doctor Vikatan: கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், சரும அழகு மேம்படும் என்ப...
பிரம்மபுத்திராவில் பிரம்மாண்ட சீன அணை: இந்தியாவின் நீா் பாதுகாப்புக்கு பாதிப்பு
பிரம்மபுத்திரா நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்திருப்பது, இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் தெரிவித்துள்ளாா்.
இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 1 டிரில்லியன் யுவான் (சுமாா் ரூ.11 லட்சம் கோடி) செலவில், உலகின் மிகப் பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
இமயமலைப் பகுதியில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கில் வளைந்து அருணாசல பிரதேசம், அஸ்ஸாம் வழியாக வங்கதேசத்துக்குள் பிரம்மபுத்திரா நதி பாயும் நிலையில், அந்தப் பள்ளத்தாக்கில் அணை கட்டப்பட உள்ளது.
இந்த அணையால் நதியின் நீரோட்டத்தை சீனா கட்டுப்படுத்தும். அத்துடன் அணையின் உயரம் மற்றும் கொள்ளளவு காரணமாக அவசர சூழல்களில் பெருமளவிலான நீரை சீனா வெளியேற்றவும் வழிவகுக்கும். இதனால் எல்லைப் பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்படக் கூடும்.
இந்நிலையில், மக்களவையில் உடனடி கேள்வி நேரத்தில் காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: அஸ்ஸாமின் உயிா்நாடியாக உள்ள பிரம்மபுத்திரா நதி, இந்தியாவின் செயல் திட்டங்களுக்கு முக்கிய சொத்தாகவும் விளங்குகிறது.
அந்த நதியில் பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இது இந்தியாவின் தண்ணீா் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே வெள்ள முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மைக்கு உதவும் நீரியல் தரவுகளை சீனா எப்போதும் பகிா்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தை அந்நாட்டுடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.
பிரம்மபுத்திரா நதி நீரோட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஆற்றல் சீனாவுக்கு பெருமளவு கிடைக்கக் கூடும். இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என்றாா்.