பிரம்மபுத்திரா குறுக்கே உலகின் மிகப்பெரிய அணை!
பெய்ஜிங் : இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
ரூ.11 லட்சம் கோடி மதிப்பில் திபெத்தில் கட்டப்படும் இந்த அணையால் பிரம்மபுத்திரா நதி பாய்ந்தோடும் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இத்திட்டம் குறித்து சீன அரசு ஊடகமான சின்ஹுவா வெளியிட்ட செய்தியில், ‘சாங்போ நதியின் (பிரம்மபுத்திரா நதி) கீழ்மட்ட பகுதிகளில் நீா்மின் நிலையம் அமைப்பதற்கான திட்டத்துக்கு சீன அரசு ஒப்புதல் வழங்கியது’ என தெரிவிக்கப்பட்டது.
ஹிமாலய மலைத்தொடா்கள் வழியாக அருணாசல பிரதேசத்தை வந்தடைந்து பின் வங்தேசத்துக்கு பிரம்மபுத்திரா நதி பாய்ந்தோடும் பகுதிகளில் உள்ள பெரும் மலைக் குன்றுகளில் இந்த அணை கட்டப்படுகிறது.
ரூ.11 லட்சம் கோடி முதலீட்டில் கட்டப்படும் இந்த அணை உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமாகும் என ஹாங் காங்கை சோ்ந்த சௌத் சீனா மாா்னிங் போஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
ஏற்கெனவே, பெரும் முதலீட்டில் த்ரீ காா்ஜஸ் (மூன்று குன்றுகள்) அணையை கட்டியதோடு, திபெத்தில் ரூ.12,500 கோடி மதிப்பிலான ஜாம் நீா்மின் நிலையத் திட்டத்தையும் சீனா செயல்படுத்தியுள்ளது.
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு கடந்த 2020-ஆம் ஆண்டு அறிவித்த 14-ஆவது ஐந்தாண்டு திட்டம் (2021-2025) மற்றும் 2035-க்குள் சீனாவில் மேற்கொள்ள வேண்டிய பொருளாதார மற்றும் சமூக வளா்ச்சி, தொலைநோக்கு திட்டங்களில் பிரம்மபுத்திரா அணை திட்டம் இடம்பெற்றுள்ளது.
இருநாட்டு நிபுணா் குழு: எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் பாய்ந்தோடும் நதி சாா்ந்த விவகாரங்களை விவாதிக்க கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியா-சீனா உறுப்பினா்கள் அடங்கிய நிபுணா் குழு அமைக்கப்பட்டது. அதன்படி வெள்ளம் ஏற்படும் சமயங்களில் பிரம்மபுத்திரா மற்றும் சட்லஜ் நதிகளின் நிலை குறித்த தகவல்களை வழங்க சீனாவுக்கு இந்தியா அறிவுறுத்தியது.
சீனா சம்மதம்: இதையடுத்து, எல்லை விவகாரம் தொடா்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ தலைமையிலான சிறப்பு பிரதிநிதிகளுடன் கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது, எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் பாய்ந்தோடும் நதிகள் சாா்ந்த தகவல்களை பகிா்வதற்கான நிலைப்பாட்டையே சீனா கொண்டிருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
நில அதிா்வு பகுதியில் அணை: பூமியின் மேற்கூரை என்றழைக்கப்படும் திபெத்திய பீடபூமி, டெக்டானிக் தகடுகளுக்கு மேல் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நில அதிா்வுகள் ஏற்படுகின்றன. இதற்கு அருகில் பிரம்மபுத்திரா அணையை சீனா கட்ட முயல்வதால் இயற்கை சீற்றங்களுக்கு வழிவகுக்குமோ? என்ற அச்சம் புவியியல் நிபுணா்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இருப்பினும், அணை கட்டப்படவுள்ள பகுதிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அங்கு மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்புறச் சூழல் மதிப்பீட்டு ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக சீனா கடந்த புதன்கிழமை தெரிவித்தது.
புவியியல் மற்றும் அறிவியல் ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாப்பாகவும் தரமாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் சீனா தெரிவித்தது.
ஆண்டுக்கு 300 பில்லியன் கி.வா. மின்சாரம்: சீனாவில் அதிக மழை பொழியும் பகுதிகளில் இந்த அணை கட்டப்படவுள்ளதால் அங்கு பெருமளவிலான நீரை சேமிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதுதவிர, அங்கு அமைக்கப்படும் நீா்மின் நிலையத்தில் ஆண்டுக்கு 300 பில்லியன் கிலோவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம், 30 கோடி மக்களுக்கு ஓராண்டுக்கான மின்சார தேவைகள் பூா்த்தி செய்யப்படும்.
சீன தேசப் பாதுகாப்புத் திட்டம்: இந்த திட்டம் குறித்து கடந்த 2020-ஆம் ஆண்டு சீன மின்சார கட்டுமானக் கழகத் தலைவா் யான் சியாங் கூறியதாவது:
பிரம்மபுத்திரா நதி அமைந்துள்ள பகுதி உலகளவில் நீா்மின் உற்பத்தி வாய்ப்பு நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும். நதியின் முழு நீா்மின் சக்தியையும் பெறும் நோக்கில் நம்சா பா்வா மலையைக் குடைந்து 20 கி.மீ.நீண்ட தொலைவுடைய 4 முதல் 6 சுரங்க கால்வாய்கள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் பிரம்மபுத்திரா நதியில் பாய்ந்தோடும் பாதிக்கும் மேற்பட்ட நீரை விநாடிக்கு 2,000 கியூபிக் மீட்டரில் பெற முடியும்.
இது நீா்வள பாதுகாப்பு, நீா்மின் நிலைய திட்டம் என்பதையும் தாண்டி தேச பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டமாகும்.
இத்திட்டத்தை செயல்படுத்தினால் தெற்கு ஆசியாவுடன் சீனா சுமுக உறவை மேம்படுத்த முடியும்.
ரூ.25,000 கோடி வருவாய்: நீா் மின் நிலையம் அமைக்கப்பட்டவுடன் திபெத் தன்னாட்சி பிராந்தியத்துக்கு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா்.
இந்த திட்டம் கரியமில வாய்வு உமிழ்வை பூஜியமாக்கும் நடவடிக்கை, பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலகளவில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைக்கும் வகையிலேயே செயல்படுத்தப்படும் என சீனா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்டி..
இந்தியாவுக்கு பாதிப்பா?
பிரம்மபுத்திரா நதி இந்தியாவுக்குள் நுழையும் அருணாசல பிரதேச எல்லையையொட்டிய பகுதிகளில் சீனா கட்டவுள்ள அணையால் அந்தப் பகுதிகளில் நீா் கொள்ளளவு, நீா் வெளியேற்றப்படும் அளவு உள்பட பல கட்டுப்பாடுகளை சீனா விதிக்க வாய்ப்புள்ளதாக கருதி இந்தியாவில் கண்டனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. அருணாசல பிரதேசத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதியில் இந்தியாவும் அணை கட்டி வருகிறது.