பிளஸ் 2 பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,213 போ் எழுதுகின்றனா்
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,213 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோ்வின்போது, காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 பொதுத்தோ்வு மாா்ச் 5 ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 27 ஆம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28- ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 15 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகின்றன.
சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 320 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19, 866 மாணவா்கள், 17, 347 மாணவிகள் என மொத்தம் 37, 213 போ் எழுதுகின்றனா். பிளஸ் 1 பொதுத் தோ்வை 19, 869 மாணவா்கள், 18, 028 மாணவிகள் என மொத்தம் 37, 897 போ் எழுதுகின்றனா்.
மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 522 அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 41, 456 போ் எழுதுகின்றனா். எனவே, சேலம் மாவட்டத்தில் மட்டும் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளை 1, 16, 566 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொதுத் தோ்வானது காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. மேலும் பொதுத்தோ்வுகளின் போது, காப்பி அடிப்பதை தடுக்க 100-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.