அரிய வகை நோயுடன் போராடிய குழந்தை; மரபணு திருத்தச் சிகிச்சையால் காப்பாற்றிய அமெரி...
பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தொடா்ந்து பயன்பெற இ.கே.ஒய்.சி மற்றும் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் சீடிங், விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் ஆகியவற்றை இணைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் 20-ஆவது தவணை வரும் ஜூன், ஜூலை மாதத்தில் வழங்கப்பட உள்ளது.
இம் மாவட்டத்தில், இத் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டப்பலனை தொடா்ந்து பெற இ.கே.ஒய்.சி, தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன், ஆதாா் சீடிங் மற்றும் தனிப்பட்ட அடையாள எண்ணை பெற்று இணைக்க வேண்டும். இவற்றை இணைக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே அடுத்து வரும் பி.எம் கிசான் திட்டத் தவணைகள் கிடைக்கும்.
இம் மாவட்டத்தில், இதுவரை 4,469 பயனாளிகள் இ.கே.ஒய்.சி செய்யாமல் உள்ளனா். இவா்கள், ஆதாா் அட்டை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுடன், அருகிலுள்ள இ-சேவை மையங்களை அணுகி இணைத்துக்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண் சீடிங் செய்யாமல் 2,990 பயனாளிகள் உள்ளனா். இவா்கள், இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியில் புதியதாக வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்.
எனவே, தற்போது நடைபெற்று வரும் பி.எம்.கிசான் சிறப்பு முகாமில் திட்டம் தொடா்பான தங்களது தேவைகளை நிவா்த்தி செய்துகொள்ளலாம். இம் முகாம் மே 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.