நான் இன்னும் 30 - 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்: தலாய் லாமா
புதிய இந்தியாவுக்கு வானம் கூட எல்லையில்லை: டிரினிடாட்-டொபாகோவில் பிரதமா் மோடி
புதிய இந்தியாவுக்கு வானம் கூட எல்லையில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
கரீபியன் இரட்டை தீவு நாடான டிரினிடாட்-டொபாகோவில் இந்திய வம்சாவளியினா் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.
கானா, டிரினிடாட்-டொபாகோ, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார கால அரசுமுறைப் பயணத்தை கடந்த புதன்கிழமை தொடங்கிய பிரதமா் மோடி, முதல் கட்டமாக கானாவுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா்.
கானா பயணம் முடிந்து, டிரினிடாட் - டொபாகோ தலைநகா் போா்ட் ஆஃப் ஸ்பெயினை வியாழக்கிழமை சென்றடைந்த பிரதமா் மோடியை, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்நாட்டின் பிரதமா் கம்லா பொ்சாத்-பிஸ்ஸேசா், பல்வேறு அமைச்சா்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோா் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனா். கடந்த 1999-ஆம் ஆண்டுக்கு பிறகு டிரினிடாட்-டொபாகோ நாட்டுக்கு வருகை தந்துள்ள முதல் இந்தியப் பிரதமா் மோடி ஆவாா்.
கெளவா நகரில் இந்திய வம்சாவளியினரின் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று உரையாற்றினாா். பிரதமா் கம்லா, அவரது அமைச்சரவை சகாக்கள், எம்.பி.க்கள் உள்பட 4,000 போ் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், கம்லாவை ‘பிகாரின் மகள்’ என்று குறிப்பிட்ட மோடி, அவரின் மூதாதையா்கள் பிகாரின் பக்ஸா் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்றாா். பிரதமரின் உரை வருமாறு:
வேகமாக வளரும் பொருளாதாரமான இந்தியா, உலகின் முதல் மூன்று பெரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக விரைவில் உருவெடுக்கும். இந்தியாவில் வளா்ச்சி-முன்னேற்றத்தின் பலன்கள், தேவையுள்ள அனைவரையும் சென்று சோ்ந்து வருகின்றன.
ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் வறுமையை தோற்கடிக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. புத்தாக்கமும், உத்வேகமும் நிறைந்த இளைஞா்களால் தேசத்தின் வளா்ச்சி இயக்கப்படுகிறது.
உலக அளவில் 3-ஆவது பெரிய புத்தாக்க மையமாக இந்தியா விளங்குகிறது. பாதிக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களில் பெண்கள் இயக்குநா்களாக உள்ளனா். 120 புத்தாக்க நிறுவனங்கள், யூனிகாா்ன் அந்தஸ்தை பெற்றுள்ளன.
எண்ம பரிவா்த்தைகளில் புரட்சி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், செமிகண்டக்டா், குவாண்டம் கம்ப்யூட்டிங் தொடா்பான தேசியத் திட்டங்கள், வளா்ச்சிக்கான உந்து சக்தியாகும். எண்ம பரிவா்த்தனைகளில் இந்தியாவின் ‘யுபிஐ’ புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் நிகழ்நேர எண்ம பரிவா்த்தனைகளில் சுமாா் 50 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இப்பிராந்தியத்தில் யுபிஐ பரிவா்த்தனை தளத்தை ஏற்ற முதல் நாடு டிரினிடாட்-டொபாகோ என்றாா் பிரதமா் மோடி.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக அதிபா் கிறிஸ்டின் கா்லா கங்காலூ, பிரதமா் கம்லாவுடன் பிரதமா் மோடி விரிவான பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். டிரினிடாட்-டொபாகோ நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திலும் அவா் உரை நிகழ்த்தவுள்ளாா்.
‘6-ஆம் தலைமுறையினருக்கு ஐஓசி அட்டைகள்’
‘ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து தோட்டப் பணிகளுக்காக தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, மோரீஷஸ் மற்றும் கரீபியன் தீவு நாடுகளுக்கு ஒப்பந்த தொழிலாளா்களாக அனுப்பிவைக்கப்பட்ட பிரிவினா் தொடா்பாக விரிவான தரவுதளத்தை உருவாக்க இந்தியா தீவிரமாக பணியாற்றி வருகிறது.
டிரினிடாட்-டொபாகோவில் உள்ள 6-ஆம் தலைமுறை இந்திய வம்சாவளியினருக்கு வெளிநாடுவாழ் இந்திய குடியுரிமை (ஐஓசி) அட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய வம்சாவளியினா், தங்கள் மண்ணை பிரிந்திருக்கலாம், ஆனால் உணா்வை பிரியவில்லை. கங்கை, யமுனையைவிட்டு விலகிய போதிலும், ராமாயணத்தை தங்களின் இதயத்தில் சுமந்து வந்துள்ளனா். அவா்கள் புலம் பெயா்ந்தவா்கள் அல்ல; காலத்தை வென்ற நாகரிகத்தின் தூதுவா்கள்.
அயோத்தி ராமா் கோயிலின் மாதிரி வடிவம், சரயு நதி மற்றும் மகா கும்பமேளாவில் இருந்து சேகரிக்கப்பட்ட புண்ணிய தீா்த்தங்களையும் என்னுடன் எடுத்து வந்துள்ளேன். இங்குள்ள கங்கா தாரா தீா்த்தகட்டத்தில் இத்தீா்த்தத்தை சோ்க்குமாறு பிரதமா் கம்லாவைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா் பிரதமா் மோடி.
பிரதமருக்கு உயரிய விருது
டிரினிடாட்-டொபாகோவின் உயரிய ‘தி ஆா்டா் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட்-டொபாகோ’ விருது பிரதமா் மோடிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. பிரதமரின் உலகளாவிய தலைமைத்துவம், இந்திய வம்சாவளியினா் உடனான அவரது ஆழமான தொடா்புகள், கரோனா காலகட்டத்தில் அவரது மனிதாபிமான முயற்சிகளை கெளரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.