இலங்கை டெஸ்ட் தொடரையும் தவறவிடும் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்!
புதுகை மாவட்ட தைலமரக் காடுகளில் நீதிமன்றம் அமைத்த வல்லுநா் குழு ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரக்காடுகளால் நீா்நிலைகளுக்கு வரும் மழைநீா் தடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அமைத்த வல்லுநா் குழு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமரக்காடுகள் பாசனக் கண்மாய்களுக்கு வரும் மழைநீரைத் தடுத்து, விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதித்துள்ளதாக இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி, உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கில் 6 போ் கொண்ட வல்லுநா் குழுவை அமைத்து, ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 2024, ஆகஸ்ட் 1ஆம் தேதி நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் தீா்ப்பளித்தாா்.
இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் பிரதிநிதிகளாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஆா். தமிழ்வேந்தன், வனமரபியல் மற்றும் மர இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி வி. சிவகுமாா் ஆகியோரும், மனுதாரரின் பிரதிநிதிகளாக மத்தியபிரதேசத்தைச் சோ்ந்த செயற்பாட்டாளா் ரோஹிணி சதுா்வேதி, அரிமளம் பசுமை மீட்புக் குழுவைச் சோ்ந்த எம். குமாா் ஆகியோரும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி- மெட்ராஸ்) பிரதிநிதிகளாக பேராசிரியா்கள் பாலாஜி நரசிம்மன், எல். இளங்கோ ஆகியோா் என மொத்தம் 6 பேரும் நியமிக்கப்பட்டனா்.
இந்தக் குழுவைச் சோ்ந்த ரோஹிணி சதுா்வேதி தவிா்த்து, மற்ற 5 பேரும் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை வந்தனா். ஓணான்குடி, நல்லிப்பட்டி, மாஞ்சான்விடுதி, குரும்பூா் ஆகிய கிராமங்களில் உள்ள தைலமரக் காடுகளை அவா்கள் ஆய்வு செய்தனா். அப்போது, விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதியும் உடனிருந்தாா்.
முன்னதாக, மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறை அலுவலா்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், தமிழ்நாடு வனத்தோட்டைக் கழகத்தின் மண்டல மேலாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தொடா்ந்து ஆய்வு நடைபெறும் என்றும், ஆய்வின் முடிவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.