ஸ்டீவ் ஸ்மித் தேர்வு: 2-ஆவது டெஸ்ட்டுக்கான ஆஸி. பிளேயிங் லெவன்!
புதுக்கோட்டையில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் மற்றும் 7-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை தொடங்கியது.
புதுக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட திருமலைராயசமுத்திரத்தில் முதல் முகாமை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தொடங்கி வைத்தாா். இந்த முகாமில், சிறந்த கிடேரிக் கன்றுக்கும், சிறந்த கால்நடை வளா்ப்போருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், கால்நடை வளா்ப்போருக்கு, கால்நடைத் தீவன விதைகளும், தாது உப்புக் கலவைகளும், தீவனப் புல் கரணைகளும் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 12 முகாம்கள் என்ற அடிப்படையில், மாவட்டம் முழுவதும் 156 முகாம்கள் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் செயற்கைக் கருவூட்டல், சினைப் பரிசோதனை போன்றவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தத் தொடக்க நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா முன்னிலை வகித்து, கால்நடை வளா்ப்போருக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் எஸ்.கே. சீனிவாசன், ஆவின் பொதுமேலாளா் அ. விருச்சப்பதாஸ், புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் பேராசிரியா் பூ. புவராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.