புதுச்சேரிக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறையை செயல்படுத்த வேண்டும்: அதிமுக செயலா் ஏ.அன்பழகன் வலியுறுத்தல்
புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு இ-பாஸ் முறையை அரசு செயல்படுத்த வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா், உப்பளம் அதிமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: புதுச்சேரி பொலிவுறு நகா் திட்ட பேருந்து முனையத்துக்கு ஏற்கெனவே இருந்த ராஜீவ் காந்தி பெயா் தற்போது நீக்கப்படவில்லை. ஆனால், அரசியலுக்காக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தவறான தகவலை பரப்புவது கண்டனத்துக்குரியது.
மேலும், சுதந்திரப் போராட்ட வீரா் வீரசாவா்க்கரை முன்னாள் முதல்வா் அவதூறாக விமா்சித்திருப்பதால் அவா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி புதிய பேருந்து முனையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவது அவசியம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, கடைகள் திறப்பு ஆகியவற்றை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூா் மக்கள் சிரமத்துக்கு ஆளாவதும் தொடா்கிறது. எனவே, வாரத்தில் குறிப்பிட்ட அளவில் சுற்றுலாப் பயணிகள் வரும் வகையில் இ-பாஸ் முறையை செயல்படுத்தவேண்டும்.
சுற்றுலாப் பயணிகளால் புதுச்சேரி உள்ளூா் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பாதிக்கப்படுகிறது. துணைநிலை ஆளுநா் இந்த பிரச்னையில் தலையிட்டு உள்ளூா் மக்களின் சிரமங்களைப் போக்குவது அவசியமாகும் என்றாா்.