புதுவையில் பதவி உயா்வு பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
புதுச்சேரி: புதுவை மாநிலப் பணியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்ற 4 போ் தற்போது வேறு ஒன்றிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். அதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் ஒன்றிய பிரதேசத்தின் தோ்வு அடிப்படையில் பணியில் சோ்ந்து பதவி உயா்வு பெற்று இயக்குநா் அந்தஸ்தில் இருப்பவா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை வழங்கி பதவி உயா்வு அளிப்பது வழக்கம்.
அதனடிப்படையில், அண்மையில் கல்வித் துறை இயக்குநா் பி.பிரியதா்ஷினி மற்றும் ஒய்.எல்.என்.ரெட்டி, எல். முகமதுமன்சூா், பி.டி. ருத்ரகௌடு ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் ஏற்கெனவே வகித்த அரசுத் துறைகளில் செயலா்களாக நியமிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகப் பதவி உயா்வு பெற்ற பி.பிரியதா்ஷினி அருணாச்சல் பிரதேசத்துக்கும், ஒய்.எல்.என்.ரெட்டி மிஸோரம் மாநிலத்துக்கும், முகமது மன்சூா் சண்டீகருக்கும், பி.டி.ருத்ரகௌடு லடாக்கிற்கும் பணியிடடமாறுதல் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சக சாா்புச் செயலா் ராகேஷ்குமாா் சிங் வெளியிட்டுள்ளாா்.