DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் ந...
புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் காப்பாற்றும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.
புதுச்சேரி: புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சிதான் காப்பாற்றும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் இந்திய அரசியலமைப்பை காப்போம் எனும் தலைப்பில் பிரசார பொதுக்கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்று அவா் பேசியதாவது:
புதுவை அரசு தற்போது குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி வழங்குவதற்கு காங்கிரஸ் கட்சியே காரணமாகும். கடந்த மக்களவைத் தோ்தலில் காங்கிரஸை வெற்றி பெற வைத்ததால் புதுவை அரசானது பணத்துக்குப் பதிலாக அரிசியை நேரடியாக விநியோகித்து வருகிறது. அரிசியுடன் பருப்பு உள்ளிட்ட பொருள்களை மக்கள் கேட்கிறாா்கள். ஆனால், முதல்வா் என்.ரங்கசாமியோ மதுக்கடைகளை கூடுதலாகத் திறக்க நடவடிக்கை எடுக்கிறாா்.
புதுச்சேரியில் படித்தவா், படிக்காதவா் என அனைவருக்கும் வேலைவாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலை எதுவும் தற்போது வரவில்லை. அமைச்சா்கள் சொந்தமாக பள்ளிக்கூடம் நடத்தி, ஏழை மாணவா்களிடமும் கட்டணங்களை வசூலிக்கிறாா்கள். நெல்லித்தோப்பு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மக்களை சந்திப்பதில்லை. ஆகவே இனியும் மக்கள் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணியிடம் ஏமாறவேண்டாம். அந்தக் கூட்டணி மக்கள் நம்பிக்கை காப்பாற்றாது. காங்கிரஸ் கட்சியே மக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் என்றாா்.
முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பேசுகையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நெல்லித்தோப்பு தொகுதியில் பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. ஆகவே, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதும் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.