புதுச்சேரி: "ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி..." - ரங்கசாமி மீது காங்கிரஸ் எம்.பி., தாக்கு
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வடமாநில மாணவி தாக்கப்பட்ட சம்பத்தைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்திலிங்கம், "மாணவி மீதான வன்கொடுமை சம்பவத்தில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். அந்த சம்பவத்தை மறைக்க நினைத்த பல்கலைக்கழக நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோல் குற்றங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால்தான் குற்றச் செயல்கள் அதிகமாக நடக்கின்றன. இச்சம்பவம் குறித்து இதுவரையில் முதல்வரும் பதில் கூறவில்லை. பா.ஜ.க என்ற சாட்டையால் முதல்வரின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. முத்தியால்பேட்டை சிறுமிக்கு மத்திய அரசின் வன்கொடுமை சட்டத்தின் கீழ்தான் நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை புதுச்சேரி அரசு எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை. '2029-ல் தான் சட்டப்பேரவைத் தேர்தல் வரும். அதுவரை எங்கள் ஆட்சிதான்' என்கின்றனர்.
2026-ல் தேர்தல் வந்தாலும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்றும் கூறுகின்றனர். வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவழைத்து வெல்வது அவர்களின் வேலை. அந்த நம்பிக்கையில்தான் அவர்கள் அதுபோல கூறுகிறார்கள். பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் ஓட்டுக்கு ரூ.10,000 கொடுப்போம் என்கிறார்கள். பா.ஜ.க 'பி’ டீம் ரூ.20,000 கொடுப்போம் என்கிறார்கள். ஓட்டுக்குப் பணம் கொடுத்து விட்டால் ஜெயித்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு ரூ.2,500 வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.5 கோடி செலவு செய்துவிட்டு, ரூ.20 கோடிக்குத் தொகுதியை விற்பவர்களும் இங்குதான் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று தெளிவாக இருக்கிறார்கள்” என்றார்.
"பா.ஜ.க எம்.எல்.ஏ-வான ஜான்குமார் தன்னுடைய லாட்டரி தொழில் குருவான, லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸைப் புதுச்சேரியில் களமிறக்குவதற்கான வேலைகளில் இருக்கிறார். அதற்காகத் தன்னுடைய காமராஜர் நகர் தொகுதியை அவருக்குக் கொடுத்துவிட்டு, முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிடக் காய் நகர்த்தி வருகிறார். அதைத்தான் எம்.பி., வைத்திலிங்கம் விமர்சிக்கிறார்” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs