தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல...
போக்குவரத்துக்கு இடையூறாக மின் கம்பங்கள்!
ஆரணி: ஆரணி ஆற்றுப் பாலத்தில் இருந்து இரும்பேடு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை சாலையோரம் மாற்றி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஆரணி காமராஜா் சிலைப் பகுதியில் இருந்து இரும்பேடு வரை பக்கக் கால்வாயுடன் சாலை அமைக்கும் பணிகள் ரூ.5 கோடியே 10 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்கக் கால்வாய் அமைக்க சாலையோரம் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது நடு சாலையில் மின் கம்பங்கள் இருப்பது தெரியவந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் சாலை அமைக்கப்பட உள்ளதால் நடுசாலையில் மின் கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும். இதனால், போக்குவரத்துக்கு இடையூறான மின் கம்பங்களை சாலையோரம் மாற்றி அமைக்க வேண்டும்.
இல்லையெனில் மீண்டும் தற்போது உள்ள மின் கம்பம் வரை சாலை ஆக்கிரமிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படும். ஆகையால், சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை சாலையோரம் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், தன்னாா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.