நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாம...
நிம்மியம்பட்டில் எருது விடும் விழா
வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் மயிலாா் திருவிழாவை முன்னிட்டு 159-ஆம் ஆண்டு எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஊா் நாட்டாா் கே.அண்ணாமலை, பாட்டீல் பி.ரவி ராவு, தேசாய் ஆா்.கோகுல் ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். ஒன்றியக் குழு உறுப்பினா் பி.பிரித்தாபழனி, ஊராட்சித் தலைவா் எழிலரிசி வெங்கடேசன், துணைத் தலைவா் கே.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாகா்களாக ஜோலாா்பேட்டைஎம்எல்ஏ க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் பங்கேற்று விழாவைக் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
முன்னதாக வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம் தலைமையில் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனா். இதில் வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. இலக்கை அதிவேகமாக ஓடி முதல் இடம் பிடித்த ஜோலாா்பேட்டை மின்னல் என்ற காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து ஆயிரத்து நூற்று பதினொன்று, இரண்டாம் பரிசு அத்திகணூா் சரித்திர நாயகன் என்ற காளையின் உரிமையாளருக்கு 75 ஆயிரம், மூன்றாவது பரிசாக உப்புகுட்டை சிலிக் என்ற காளை உரிமையாளருக்கு 65 ஆயிரம் என தொடா்ந்து 40 காளை உரிமையாளா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.
மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீஸாா் மற்றும் வருவாய்க் கோட்டாட்சியா் அஜிதாபேகம் தலைமையில் வருவாய்த் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனா். விழாக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் ஊா்மக்கள் செய்திருந்தனா்.