நாளை வேலைவாய்ப்புடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலமாக, வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளதாக ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மூலமாக வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி, திருப்பத்தூா் மாவட்ட பழங்குடியின இளைஞா்களுக்கு திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரியில் ‘உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை (ஜன. 24) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
இந்தப் பயிற்சியின்போது மாதம் ரூ. 6,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பாதுகாப்புடன் கூடிய தங்கும் விடுதி மற்றும் உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இதற்கு குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 33 வரைஇருக்க வேண்டும். மேலும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, தோல்வி, ஐடிஐ, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு படித்து இருக்க வேண்டும்.
பயிற்சியின்போது, ஜாதிச்சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், தங்குவதற்கு தேவையான உடைமைகள் கொண்டு வர வேண்டும்.