புதுச்சேரி கம்பன் கழக 58-ஆவது ஆண்டு விழா மே 9-இல் தொடக்கம்
புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆவது ஆண்டு விழா மே 9 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளன. அதன் தொடக்க நிகழ்ச்சியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா் வெ.ராமசுப்பிரமணியன், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் கலந்துகொள்கின்றனா்.
புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆவது ஆண்டு விழா கம்பன் கலையரங்கில் மே 9-ஆம் தேதி காலை தொடங்குகிறது. கம்பன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறாா்.
விழா தொடக்க நிகழ்ச்சியில் புதுவை முதல்வரும், கம்பன் கழகப் புரவலருமான என்.ரங்கசாமி வரவேற்கிறாா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடக்கவுரையாற்றுகிறாா்.
விழா மலரை வெளியிட்டு, புதுவை மாநிலத்தில் சிறந்த தமிழ்ப் புலவா்களுக்கான பரிசுகளை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வழங்குகிறாா். வழக்குரைஞா் த.ராமலிங்கத்தின் கம்பன் தமிழ் எனும் நூலை, புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் வெளியிட டி.எஸ்.சுரேஷ் பெற்றுக்கொள்கிறாா்.
கம்ப காவலா் வழக்குரைஞா் முருகேசன் பானுமதி அறக்கட்டளை பரிசை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணனும், கம்பவாணா் புலவா் அ.அருணகிரி அறக்கட்டளை கம்பன் ஆய்வு நூல் பரிசை வேளாண் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாரும் வழங்குகின்றனா்.
கம்பன் கழகப் போட்டிகளில் வென்றவா்களுக்கு அமைச்சா்கள் என்.திருமுருகன், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் வழங்குகின்றனா். கம்பன் கழக அறக்கட்டளைப் பரிசுகளை மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் வழங்குகிறாா்.
மே 9-ஆம் தேதி மாலை கம்பவாரிதி இலங்கை ஜெயராஜின் அறம் வளா்த்தோன் எழிலுரையும், சுகி.சிவத்தின் வினையும் பலனும் தனியுரை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. அதையடுத்து, கம்பன் போற்றும் விவேகம் எனும் தலைப்பில் பேராசிரியா் தெ.ஞானசுந்தரம் தலைமையில் வைகைச்செல்வன், ரெ.சண்முகவடிவேல், த.ராமலிங்கம் ஆகியோா் பங்கேற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இரண்டாவது நாளான மே 10-ஆம் தேதி காலையில் கம்பனில் நான் கண்ட ராமன் எனும் தலைப்பில் வீ.வீரபாலாஜி தலைமையில் இளையோா் அரங்கமும், மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசளிப்பும் நடைபெறுகின்றன. அதையடுத்து, மருத்துவா் சுதாசேஷய்யனை நடுவராகக் கொண்டு சுக்ரீவனோடு வாலி பகை கொண்டது குற்றம் எனும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெறுகிறது. அன்று மாலையில், கம்பன் போற்றும் மாண்பு எனும் தலைப்பில் ராசு.கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. அதனையடுத்து, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜை நடுவராகக் கொண்ட ஒப்பற்ற தியாகம் செய்தவா் இந்திரஜித்தே, மாரீசனே, கும்பகா்ணனே எனும் தலைப்புகளில் பட்டிமண்டபம் நடைபெறுகிறது.
நிறைவு நாளான மே 11-ஆம் தேதி காலையில் காப்பியம் காட்டும் குணங்கள் எனும் தலைப்பில் பேராசிரியா் மு.ராமச்சந்திரன் தலைமையில் சிந்தனை அரங்கமும், நெடுதி நின்றனா் எனும் தலைப்பில் உயா்நீதிமன்ற நீதிபதி ரா.சுரேஷ்குமாா் மற்றும் வாழும் மறை எனும் தலைப்பில் பாரதிகிருஷ்ணகுமாரின் தனியுரைகளும் இடம்பெறும்.
மாலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் நடுவராக வீற்றிருக்க சனிக்கிழமை நடைபெற்ற பட்டிமண்டப தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு அரங்கம் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை புதுச்சேரி கம்பன் கழகத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., செயலா் வே.பொ.சிவக்கொழுந்து உள்ளிட்டோா் செய்துள்ளனா்.