``புதுச்சேரி போலீஸ் லஞ்சம் வாங்கறாங்க… நாங்க நேர்மையா இருக்கோம்'' - ஐஆர்பிஎன் அறிக்கையால் சர்ச்சை
புதுச்சேரியில் இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் (IRBn) படைப்பிரிவு கடந்த 2005-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தலைமையகம் கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஐ.ஆர்.பி.என் படைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு நீண்ட காலம் ஆவதால் அதை உள்ளூர் போலீஸுடன் இணைத்து, அவர்களுக்கு கொடுப்பதைப் போலவே பதவி உயர்வு, சம்பளம் ஆகியவை வழங்க வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் டி.ஜி.பி ஷாலினி சிங் பிறப்பித்த உத்தரவில், மார்ச் 5-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வரை ரூட் மார்ச் (நடைபயணம்) செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் ஐ.ஆர்.பி.என் அதிகாரிகள் தரப்பிலிருந்து சமூக வலைத்தளங்களில் ஒரு அறிக்கை பகிரப்பட்டு வருகிறது.

(இது குறித்து பிப்ரவரி 28-ம் தேதியன்று புதுச்சேரி IRBn: `32 கி.மீ ரூட் மார்ச்’ - ஐ.ஆர்.பி.என் அதிகாரிகளுக்கு கொடுத்தது தண்டனையா... பயிற்சியா? என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம்.)
அந்த அறிக்கையில் புதுச்சேரி போலீஸார் மீது நேரடியாக வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, `லஞ்சம் வாங்கும் புதுச்சேரி போலீஸார் பலர் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் கடமையை நேர்மையாக செய்து கொண்டிருக்கிறோம். எனவே எங்களுக்கான உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்’ என்ற கருத்துக்கு போலீஸார் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனால் புதுச்சேரி போலீஸாருக்கும், ஐ.ஆர்.பி.என் பிரிவினருக்கும் மறைமுக பனிப்போர் துவங்கியிருக்கிறது.