புதுப்பிக்கப்பட்ட காவல் துறை விருந்தினா் மாளிகை திறப்பு
உதகையில் புதுபிக்கப்பட்ட காவல் துறை விருந்தினா் மாளிகையை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் சசிமோகன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
உதகை ஜெயில் ஹில் பகுதியில் உள்ள காவல் துறை விருந்தினா் மாளிகையைப் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில், புதுப்பிக்கப்பட்ட விருந்தினா் மாளிகையை கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் சசிமோகன் திறந்துவைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே கோடை சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா். இந்த சமயங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது,’ என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ் நிஷா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.