ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி
எம்புரான் தயாரிப்பாளரிடம் ரூ. 1.5 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை
எம்புரான் பட தயாரிப்பாளரிடம் இருந்து ரூ. 1.5 கோடி பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படம் வெளியான நாள்முதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. படத்தில் வலதுசாரிகளைத் தவறாகக் காட்சிப்படுத்தியதாக எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்பட்டன.
நடிகர் மோகன்லால் இதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, படத்தைத் தடை செய்யக்கோரி பாஜகவினர் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலனின் வீடு மற்றும் ஸ்ரீ கோகுலம் சிட்ஃபன்ட்ஸ் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நேற்றும், இன்றும் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனை சென்னை மற்றும் கொச்சியில் அவருக்குச் சொந்தமான 3 இடங்களில் நடைபெற்றது. இதில், அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக ரூ. 1.5 கோடி பணத்தை அவரிடமிருந்து அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து ரூ. 371.80 கோடி பணத்தை ரொக்கமாகவும் ரூ. 220.74 கோடி காசோலையாகவும் அவரது நிறுவனம் வசூலித்தது கண்டறியப்பட்டுள்ளது. இதில், பலருக்கும் பணத்தைத் திரும்பக் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
இது, அந்நியச் செலாவணி சட்டடம் 1999-ன் பிரிவு 3(பி)-ஐ மீறியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும். இது தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி ஸ்ரீ கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் மற்றும் பைனான்ஸ் நிறுவனம் சிட் ஃபண்ட் சந்தாக்களை வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்து ரொக்கமாகப் பெற்றுள்ளது. இதற்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. இது, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிமீறல் என அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சோதனை கடந்த 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டது என்றும் இதற்கும் எம்புரான் பட சர்ச்சைகளுக்கும் தொடர்பில்லை என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கோழிக்கோடில் வைத்து கோபாலனிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இந்த வழக்கில் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தவேண்டுமா என்பதற்கு அந்த நிறுவனம் மீதான மோசடி புகார்களை ஆராய்ந்து வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுமட்டுமின்றி, எம்புரான் படத்தின் இயக்குநரான பிருத்விராஜுக்கு இன்று வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.