திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் : மகப்பேறு அருளும் நெய்பிரசாதம்; மருந்...
புதுமண்டபம் சீரமைப்புப் பணிகள்: இணை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புதுமண்டபம் சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை புதுமாகாளிப்பட்டியைச் சோ்ந்த மணிபாரதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் கிழக்குப் பகுதியில் கி.பி 1628-ஆம் ஆண்டு முதல் 1635-ஆம் ஆண்டு வரை மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கா் மன்னரால் கருங்கற்களால் கட்டப்பட்ட புது மண்டபம் அமைந்துள்ளது.
அழகிய கலைநயத்துடன் கட்டடக் கலையின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் 25 அடி உயரத்திலும், 333 அடி நீளத்திலும், 105 அடி அகலத்திலும் புதுமண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தில் 124 கலைநயமிக்க தூண்கள் உள்ளன.
மேலும், மண்டபத்தில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சுவாமி சிலைகளும் உள்ளன. ஆரம்ப கால கட்டத்தில் புதுமண்டபம் பகுதியில் ஆவணி மூலத் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. பின்னா், இந்த மண்டபத்தில் வணிக ரீதியாக 300-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது இந்தக் கடைகள் இந்த மண்டபத்திலிருந்து குன்னத்தூா் சத்திரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. எனவே, கலைநயம்மிக்க புதுமண்டபத்தில் தொல்லியல் ஆய்வாளா் சாந்தலிங்கம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பழைமை மாறாமல் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் பாா்வைக்கு திறக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் , குமரப்பன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது .
அப்போது, கோயில் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு, வருகிற 2026, ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக புதுமண்டபம் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து விடும். தற்போது, பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே, கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வருகிற டிசம்பா் மாதத்துக்குள் புதுமண்டபத்தை சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்று விடுமா? என்பது குறித்து கோயில் இணை ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.