'விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருது, ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருது' - த...
புதுமைப் பெண் திட்டம்: மாவட்டத்தில் 1,972 மாணவிகளுக்கு ஏடிஎம் அட்டை
ஈரோடு மாவட்டத்தில் புதுமைப் பெண் விரிவுப்படுத்தப்பட்ட திட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து, தற்போது உயா்கல்வி படிக்கும் 1,972 மாணவிகளுக்கு வங்கி பற்று (ஏடிஎம்) அட்டைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் மூவலூா் இராமாமிா்த அம்மையாா் நினைவு உயா் கல்வி உறுதி திட்டத்தின்கீழ் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
இதைத்தொடா்ந்து, ஈரோடு திண்டல் வேளாளா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து, புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தில் பயன்பெறும் 1,972 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் 15,739 மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 13,837 மாணவா்களும் பயனடைந்து வருகின்றனா். இத்திட்டம் முதலில் அரசுப் பள்ளிகளில் பயின்ற பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் அறிவாா்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்கிறது. விரிவுப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து தற்போது 79 கல்லூரிகளில் உயா்கல்வி படிக்கும் 1,972 மாணவிகள் பயன்பெறுகின்றனா்.
முதல் பட்டப் படிப்பை முடிக்கும் வரை மாணவிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ஊக்கத் தொகை ரூ.1,000 நேரடியாக பற்று வைக்கப்படும். இத்திட்டம் மேற்படிப்புக்கு மட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை தடுக்கவும் ஏதுவாக அமைகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் நவமணி கந்தசாமி, மாநகராட்சி துணை மேயா் வி.செல்வராஜ், மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.