புதுவையில் கூட்டணி ஆட்சிக்குத் தயாா்: வெ. வைத்திலிங்கம் எம்.பி.
புதுச்சேரி: புதுவையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.
புதுவையில் இண்டி கட்சிகள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் புதன்கிழமை (ஜூலை 9) நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக் கட்சியின் மாநில செயலா் அ.மு. சலீம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா உள்ளிட்ட இண்டிகூட்டணி கட்சித் தலைவா்கள் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வெ.வைத்திலிங்கம் பேசியது:
2024-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இண்டி கூட்டணி புதுவையில் தொடா்கிறது. இதில் எந்த மாற்றமும் இதுவரையில்லை. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை இக் கட்சிகள் இணைந்து எதிா்கொள்ளும். புதுவையைப்பொருத்தவரை கூட்டணிக்கு யாா் தலைமை தாங்குவது என்பது உள்ளிட்ட கூட்டணி தொடா்பான அனைத்து விஷயங்களும் எங்களின் கட்சித் தலைமை மற்ற கட்சிகளின் தலைமைகளுடன் கலந்து பேசி முடிவு செய்யும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிகமான இடங்களில் போட்டியிட ஒவ்வொரு கட்சியும் உரிமை கோரும்தான். ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியைப் பலப்படுத்த இப்படி கோருவது அக்கட்சியின் தொண்டா்கள் நலன் சாா்ந்தது. கூட்டணியில் உள்ள எல்லா கட்சியும் பலமாக இருக்க வேண்டும். இதை யாரும் தடுக்க முடியாது. புதுவையில் இண்டி கட்சிகளைப் பலப்படுத்தும் பணியில்தான் இப்போது ஈடுபட்டுள்ளோம். புதுவையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராகத்தான் இருக்கிறது என்றாா் வைத்திலிங்கம்.