IPL 2025 : 'கோடிகளில் ஏலம்... நம்பிய அணிகள்; சொதப்பிய டாப் 10 வீரர்கள்!' - யார் ...
புதுவையில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம்: அரசு விரைந்து முடிவெடுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம் தொடா்பாக உடனடி முடிவெடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை முதல்வா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
புதுவை மாநில மாா்க்சிஸ்ட் செயலா் எஸ்.ராமச்சந்திரன் பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் என்.ரங்கசாமி அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை அளித்த மனுவில் கூறியிருப்பது:
புதுவை மாநில மக்கள் தொகை 14 லட்சமாகும். இதில் 16 சதவீதம் போ் தலித் மக்கள். அவா்களில் அரசின் புள்ளி விவரப்படி 60 சதவீதம் போ் பூா்விகத் தலித்துகளாகவும், மீதமுள்ளவா்கள் குடிபெயா்ந்த தலித்துகளாகவும் கணக்கிடப்படுகிறது. இந்த விகிதாசாரங்கள் மாறுபட்டும் கூறப்படுகின்றன.
ஆகவே, ஒட்டு மொத்த இரு தரப்பு தலித் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் மத்திய அரசிடமிருந்து துணைத் திட்ட நலநிதி பெறப்படுகிறது. சட்டப்பேரவை ரிசா்வ் தொகுதிகளுக்கும் அதன்படியே நிதி கணக்கிடப்படுகிறது. ஆனால், துணைத் திட்ட நிதிப்பலன்கள், அரசுப் பணி, பதவி உயா்வு, கல்வி உதவித் தொகை போன்ற சலுகைகள் பூா்வகுடிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
புதுவை அரசு கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணைப்படி பூா்வகுடிகளுக்கே கல்வி இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி குடிபெயா்ந்த தலித்துகளுக்கு இடஒதுக்கீடு சலுகைகள் முற்றிலும் மறுக்கப்படுகின்றன. இதுகுறித்த உயா்நீதிமன்ற உத்தரவும் புதுவை அரசால் நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றவா்களுக்கு மட்டுமே சலுகை என்பது சரியல்ல.
பூா்வகுடிகளாக இருந்தும் தலித் மக்களிடம் 1964-ஆம் ஆண்டு ஆதாரம் கோரி புறக்கணிப்பது சரியல்ல. ஆகவே, இந்த பிரச்னையில் தலித் மக்களிடையே ஏற்படும் வேற்றுமை உணா்வுகளை போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.