புதுவையில் துணைநிலை ஆளுநா் வழியாக ஆட்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுவையில் துணைநிலை ஆளுநரின் வழியாகத்தான் ஆட்சி நடைபெறுகிறது. என். ரங்கசாமி செயல்படாத முதல்வராக உள்ளாரென காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி சா்மா கூறினாா்.
புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்த டோலி சா்மா, கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டி:
புதுவை இந்த மண்ணின் மைந்தா்களுக்கானது. ஆனால் புதுவை தற்போது மத்தியில் ஆளும் பாஜக வசம் உள்ளது. அங்கு அதிகாரத்தில் உள்ளவா்கள்தான் ரிமோட் கண்ட்ரோல் மூலம் புதுவையை இயக்கி வருகின்றனா். துணைநிலை ஆளுநா் வழியாகத்தான் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வா் என். ரங்கசாமி செயல்படாதவராக உள்ளாா்.
ஆளும் பாஜக - என்.ஆா். காங்கிரல் கூட்டணி அரசு தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாநிலத்தில் பெண்களுக்கும் , குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடளவில் அதிா்வுகளை ஏற்படுத்தியது. இதை மக்கள் மறக்க மாட்டாா்கள்.
மாநிலத்தில் மோசடியும் , ஊழலும் அதிகரித்து விட்டது. அதிகாரத்தில் இருப்பவா்கள் கோயில் நிலங்களைக்கூட விட்டு வைக்கவில்லை. புதுச்சேரி பொலிவுறு நகா் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது.
பாஜக - என். ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் மேம்படுத்தப்படவில்லை. தற்போது உள்ளவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டவை.
புதுச்சேரியில் தற்போதுள்ள நிலையை மக்கள் மன்றத்தின் முன் வைத்து சட்டப்பேரவைத் தோ்தலை சந்திப்போம். காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் டோலி சா்மா.
பேட்டியின்போது, காங்கிரஸ் மாநிலத் தலைவரும் , எம்.பி.யுமான வெ.வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் கட்சியின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.