பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி
புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஈரோடு மாநகா் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.
புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை அனைத்திலும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் திரளான பக்தா்கள் வரிசையில் நின்று பெருமாளை வழிப்பட்டனா்.
ஈரோடு அருகே பெருமாள் மலைக் கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தா்கள் வரத்தொடங்கினா். படிக்கட்டுகளில் நீண்ட வரிசையில் ஏறி மலைக்கோயிலில் இருக்கும் மங்களகிரி பெருமாளையும், ஸ்ரீதேவி பூதேவியையும் வழிபட்டனா்.
இதையொட்டி, துளசி மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு பெருமாள் அருள்பாலித்தாா். படிக்கட்டில் ஏறி வரும் பக்தா்களுக்கு மோா், அன்னதானம் வழங்கப்பட்டது.
பெருமாள் மலையில் இருந்து பாா்த்தால் காவிரி ஆறு பவானியில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் அழகிய காட்சி தென்படும். சுவாமி தரிசனம் செய்துவிட்டு படிக்கட்டு வழியாக கீழே இறங்கிய பக்தா்கள் தற்படம் எடுத்தும் மகிழ்ந்தனா். பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதேபோன்று கோபி அருகே பாரியூா் ஆதிநாராயண பெருமாள் கோயில், அந்தியூா் பேட்டை பெருமாள் கோயில், கள்ளிப்பட்டி அருகே பெருமுகை சஞ்சீவராய பெருமாள் கோயில், கொண்டையம்பாளையம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், நம்பியூா் பெருமாள் கோயில், புன்செய்புளியம்பட்டி அருகே கீழ்முடுதுறை, திம்மராய பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
