புலித்தோல் கடத்திய 11 பேர் கைது!
ஒடிசா மாநிலத்தில் புலித்தோல் கடத்திய 11 பேரை பாலசோர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பாலசோர் மாவட்டம் சோரோ நகரில் புலித்தோல் கடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து ஒரு புலித்தோலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாலசோர் வனத்துறை அதிகாரி குஷ்வந்த் சிங் கூறுகையில், வனவிலங்குகளின் பாகங்கள் சந்திப்பூர் காட்டுப்பகுதியில் விற்கப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தாகவும், அதன் அடிப்படையில் பாலசோர் மற்றும் மயூர்பஞ்சு ஆகிய இரு மாவட்டங்களின் வனத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச.22) அந்த குழுவினர் நடத்திய சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ஒரு புலித்தோலும் கைப்பற்றப்பட்டது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க: ரஷிய போரில் இந்தியர் பலி...6 மாதங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட உடல்!
கைதுசெய்யப்பட்ட 7 பேரும் சந்திப்பூர் வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த திங்களன்று (டிச.23) மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியும், 8 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் அந்த புலித்தோல் அவர்களிடம் எப்படி வந்தது? அது ஒடிசாவில் வேட்டையாடப்பட்டதா? என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 11 பேரின் மீதும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.